2,000 மினி கிளீனிக் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் !

‘மருத்துவர்களுடன் நடந்த முக்கிய ஆலோசனை’… ‘2,000 மினி கிளீனிக்’… முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக் அமைக்கப்பட இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனவை கட்டுப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதில் முக்கியமாகத் தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 2,000 மினி கிளீனிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளீனிக்கில் இடம் பெறுவார்கள். ஆரம்பச் சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளீனிக் அமைக்கப்படும். இதற்கிடையே கொரோனா படிப்படியாகக் குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.