செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு !

“பள்ளிகளை திறக்கலாம்.. ‘இந்த’ வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்!”.. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு!

செப்டம்பர் 21-ஆம் தேதி முதல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுள் விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கட்டாய முகக்கவசம், வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி கைகளை சோப்புப் போட்டோ அல்லது ஆல்கஹால் கலந்த சானிட்டைசர் கொண்டோ கைகளைக் கழுவ வேண்டும் என்றும் இருமல், சளி தொந்தரவுள்ள மாணவர்கள் கைக்குட்டை, துடைப்புக் காகிதம் கொண்டு உரிய பாதுகாப்பு நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் தாமாக முன்வந்து உடனே ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஆரோக்கிய சேது செயலியை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுள் விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன், பள்ளிக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு வெளியே இருக்கும் பள்ளிகள் மட்டுமே திறக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, கேண்டீன் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் கூடுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், பாடம் தொடர்பான கலந்துரையாடல்களை திறந்தவெளி பகுதிகளில் மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.