கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய கருவி

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய காலகட்டத்தில் சமுதாய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலப் பணிகளை செய்து வரும் கோவை அவினாசி சாலையில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தனது மாணவர்களை கொரோனா பரவலை தடுக்கும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க ஊக்குவித்தும் உறுதுணையாகவும் இருந்துவருகிறது.

இதன் வெளிப்பாடாக “டிஸ்டெம்பாட்” (DISTEMBOT) என்ற புதியதொரு கருவியை இக்கல்லூரியின் இயந்திரவியல் துறையை சார்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் நாகசூரியா, பிரனேஷ் மற்றும் மோகன் தாஸ் ஆகியோர் உதவி பேராசிரியர்கள் சரவணன் மற்றும் ஜோயல் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கி உள்ளனர்.

இக்கருவியானது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு உறுதுணையாக செயல்படுகிறது. இக்கருவியை நம் கையில் அணிந்திருக்கும் பட்சத்தில் இரண்டு மீட்டருக்கு குறைவான இடைவெளி ஏற்பட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இக்கருவியை அணிந்து இருப்பவரின் உடல் வெப்பநிலையை தொடர்ச்சியாக கண்காணித்து அதனை தெரிவிக்கும். அதுமட்டும் இல்லாமல் இக்கருவியில் பயன்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் இரண்டு பிரிவாக செயல்பட்டு (SENDER RECEIVER) மனிதனின் உடல் வெப்பநிலையை கண்காணிப்பதோடு வெப்ப நிலை சராசரி அளவை விட அதிகமாக இருந்தால் தகவலை கண்காணிப்பாளருக்கு எச்சரித்துவிடும். இதில் கூடுதலாக நாள் மற்றும் நேரத்தை குறிப்பிட்டு காட்டும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பயன்பாடுகள்: பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இதனை பயன்படுத்தலாம்.

இந்த கருவியை உருவாக்கிய மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும், உறுதுணையாக இருந்த இயந்திரவியல் துறையின் தலைவர் குணசேகரனையும் கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, பொது மேலாளர் முனுசாமி, கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் முதன்மை செயலாளர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.