தமிழகத்தில் முதன்முதலாக திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு

கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைகள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர்.

முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்படும் இந்த உணவகத்திற்கு UWC ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ, அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளனர். அப்பாசாமி கல்லூரியில் இந்த 10 பேருக்கு உணவகம் செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 பேரால் இயங்கும் இந்த உணவகமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுசெயல்பட்டால் 6 மாதம் கழித்து மற்றொருகிளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் சங்கீதா பேசுகையில், திருநங்கையினருக்கு வாழ்வாதாரம் அளிக்க இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வோம், வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக திருநங்கைகளால் முழுக்க முழுக்க செயல்படும் உணவகம் இதுவேயாகும் என்றும் தெரிவித்தார்.