இந்துஸ்தான் கல்லூரி மொழித் துறையின் இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

உலக நாட்டுப்புறவியல் தினம் (ஆகஸ்ட் 22), உலகப் பழங்குடியினர் தினம் (ஆகஸ்ட் 9) ஆகியவற்றை நினைவூட்டும் வகையில் கோயம்புத்தூர் நவ இந்தியா அருகே உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் மொழித் துறை சார்பில் இணைய வழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூன்று நாட்கள் (27.08.2020 முதல் 29.08.2020 வரை) நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் தலைவர் கண்ணையன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் தலைமையில், கல்லூரி செயலர் முனைவர் பிரியா சதீஷ்பிரபு முன்னிலையில், கல்லூரி முதல்வர் முனைவர் பொன்னுசாமி வழிகாட்டலில், மொழித் துறைத் தலைவர் முனைவர் இரா.இரமேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

முதல் நாளில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ச.இரவி, மக்கள் வழக்காற்றுக் கதைப் பாடல்களில் தலைவர்கள் – புதிய பார்வை என்ற தலைப்பில் பேசினார். இரண்டாம் நாளில் கோயம்புத்தூர், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.அரிச்சந்திரன், பழங்குடி மக்களின் வாய்மொழி வழக்காறுகள் என்ற தலைப்பில் பேசினார்.

மூன்றாம் நாளில் பூ.சா.கோ. கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் இரா.செல்வி, பெண்ணிய நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் என்ற பொருண்மையில் பேசினார். நிகழ்வு ஒருங்கிணைப்புப் பணிகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் பா.பிரபு, நா.கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். உலகம் முழுவதும் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.