பாஜக வில் இணைந்தது பெருமையாக உள்ளது : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பேட்டி

சமூக வலைதளங்களில் விமர்சனம் எனும் குப்பைகளை தன் மீது போடுகிறார்கள் எனவும், அந்த குப்பையில் தாமரையை வளர்த்துவோம் எனவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக கட்சியில் இணைந்ததில் பெருமையடைகிறேன் என தெரிவித்தார். பாஜக சாதாரண மனிதனுக்கான கட்சி எனவும், 2021 சட்டமன்ற தேர்தலில் திருப்பு முனை ஏற்படும் எனவும் அவர் கூறினார். தனக்கு பாஜக மேலிடம் கட்சியில் பொறுப்பு கொடுக்கும் எனவும், தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எங்கு போட்டியிடுவது என்பது குறித்தும் கட்சி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தனக்கு கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும், தனது அரசியல் தமிழ்நாட்டை நோக்கியே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு மாற்றுப்பாதை தேவை எனவும், பாஜக தமிழ்நாட்டில் முக்கியமான சக்தியாக வருமெனவும் அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை எனவும், தமிழ்நாட்டை பாஜக புறக்கணிக்கவில்லை எனவும் கூறிய அவர், தமிழர்களுக்கு எதிரான கட்சி என பாஜகவை எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழுக்காக செய்தவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், தேர்தல் கூட்டணி பற்றி பேச தனக்கு தகுதியில்லை எனவும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் மழை குறைவாக பெய்யும் போது தான் காவிரி நீர் பிரச்சனை வருகிறது எனவும், மத்திய அரசு காவிரி நதி நீர் விவகாரத்தில் அநியாயம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது எனவும், தமிழுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூறிய அவர், பல மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது என தெரிவித்தார். நீட் தேர்வு வேண்டாம் என்றால் மாற்று என்ன எனக் கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வை அரசால் நடத்த முடியும் எனவும், வசதிகளை செய்து கொடுத்து நீட் தேர்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆயுஸ் கூட்டத்தில் இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்னது கண்டனத்திற்குரியது எனவும், அதற்காக ஒரு அரசு அதிகாரி சொன்னது அரசின் கொள்கையல்ல எனவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டை பற்றி நாடாளுமன்றத்தில் பேச தலைவர்கள் இல்லை எனவும், தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் விமர்சனம் எனும் குப்பைகளை தன் மீது போடுகிறார்கள் எனவும், அந்த குப்பையில் தாமரையை வளர்த்துவோம் எனவும் அவர் கூறினார்.