கேள்விகளுக்கு ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்த மாஸ்டர் இணை தயாரிப்பாளர்

ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் பலருக்கும் இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்போனும், டிவி, அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களும் தான். ஊரடங்கு காலத்தில் இதன் வளர்ச்சி 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழில் படம் தயாரிக்கும் சில தயாரிப்பாளர்களே புதிய ஓடிடி தளங்களை நிறுவியிருக்கிறார்கள். இது திரைத்துறைக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்குமா என்று திரைத்துறையினரின் மனதிலே கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் சூரரைப் போற்று போன்ற பெரிய பட்ஜெட் படம் ஒடிடி தளங்களில் வெளியிடுவது அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது என்ற கருத்தை திரைத்துறையினர் முன்வைக்கின்றனர்.

நீண்டகாலமாகவே சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய அளவில் தியேட்டர் கிடைக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் டேனி, காக்டெயில், லாக்கப் போன்ற படங்கள் ஒடிடி மூலம் வெளி வந்து போட்ட பணத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டது. இதனால், புதிய ஓடிடி தளங்கள் வரவேற்கப்பட வேண்டிய விஷயமே என்று தயாரிப்பாளர் சிவா தெரிவிக்கிறார்.

தமிழில் வரும் புதிய ஓடிடி தளங்கள் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், சினிமாவில் புதிய மாற்றத்தை விரும்பி படமெடுக்கும் இயக்குனர்களுக்கும், வெப்சீரிஸ் ரசிகர்களுக்கும் வரும் காலங்களில் ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தி தரும் என்பதே சினிமா தொழில்நுட்ப கலைஞர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

இதற்கிடையே, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பதை, அதன் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தாக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிலைமையே மாறியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனவே, “எல்லாம் சரியானதும் கொண்டாட்டம் காத்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இது, ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியாகக் கூடும் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ரஜினி, அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க திரையரங்குகளில் தான் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.