இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது ‘கொரோனா ட்ரேஜ் சென்டர்’

சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளில் அமைக்கப்பட்டுள்ள இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும்  ‘‘கொரோனா ட்ரேஜ் சென்டரைமாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) மகேஷ் கனகராஜ், வட்டாச்சியர் (வடக்கு) மகேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பல்வேறு விதமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், அரசு அறிவுரை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, கொரோனா அறிகுறியில்லாத நிலையில் தொற்று உள்ளவர்களுக்கு என தனியாக சிகிச்சை அளித்திட ஏதுவாக கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 668 படுக்கை வசதிகள் உள்ளன. இம்மையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கொடீசியாவிலுள்ள டீ அரங்கத்தில்   464 படுக்கை வசதிகளுடன் கூடிய  தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இம்மையத்திலும், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளில் அமைக்கப்பட்டுள்ள ‘‘கொரோனா ட்ரேஜ் சென்டர்மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றின் தன்மை குறைவாக உள்ளவர்கள், அதற்கு தகுந்தவாறு கண்காணிப்பு மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநகராட்சியில் மத்திய மண்டலத்தில் இன்று முதல் இம்மையம் செயல்பாட்டுக்கு வருகிறது. இம்மையத்தினை 0422 4279467 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுபோல ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வார காலத்தில் மையங்கள் தொற்று ஏற்பட்டவர்களின் வசதிக்காக அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.