மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் இன்று 15 பேருக்கு கொரோனா !

கோவை அரசு மருத்துவமனையின்  மருத்துவர், செவிலியர்கள் என கோவையில் இன்று (24.8.2020) 387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 300ஐ கடந்து அதிகரித்து வருகிறது.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் 387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதில், கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர், ஒரு செவிலியர், 3 பயிற்சி செவிலியர்கள் என 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களைத் தவிர மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் இன்று 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், ராம் நகர், பீளமேடு மற்றும் துடியலூர் பகுதிகளில் தலா 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குனியமுத்தூர்,  காந்திபுரம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் தலா 10 பேருக்கும், கணபதி பகுதியில் 9 பேருக்கும், பொள்ளாச்சி பகுதியில் 8 பேருக்கும் என கோவையில் இன்று 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதன்படி, கோவையில் இதுவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 12 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கோவையில் இன்று 7 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர். இதுவரை கோவையில் 244 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.