வேகம் எடுக்கிறதா கொரோனா?

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக பல விஷயங்களில் முன்னணியில் இருந்து வந்த கோவை கடந்தசில நாட்களாக கொரோனா பாசிட்டிவ் பாதிப்பிலும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆமாம், தினமும் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பாசிட்டிவ் என்று செய்தி வருகிறது.

கோவையைப் பொறுத்தவரை பெரிய தொழில்நகரம், பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் அதிகம், பல ஊர்களுக்கும் தொழில், வணிகத் தொடர்புகள், அதன் பொருட்டு நடக்கும் போக்குவரத்து என்று பல பரிமாற்றங்கள் இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் பரவலைப் பொறுத்தவரை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அக்கறையுடன் கூடிய வழிகாட்டுதல் என்று இதுவரை பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான சிகிச்சை மையங்களாக இஎஸ்ஐ மருத்துவமனையும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. பாசிட்டிவ் ஆனாலும் பெரிய அளவில் சிக்கல்கள் இல்லாத அளவு நோய்த்தொற்று இருப்பவர்களை கவனித்துக்கொள்ள கொடிசியா போன்ற இடங்களிலும் கவனிப்பு மையங்கள் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

என்றாலும் இதையும் மீறிதற்போது பாசிட்டிவ் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது கவலை அளிப்பதாகவே உள்ளது.இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். கொரோனா குறித்த அச்சம் குறைந்து அது பரவும் அளவுக்கு சூழல் உருவாகி வருவதைத்தான் இது காட்டுகிறது.பொதுவாகவே இந்த கொரோனா வைரஸ் எந்த முன்தீர்மானங்களுக்கும் இடம் கொடுக்க முடியாத, நம் எவருக்கும் அனுபவம் இல்லாத ஒரு துயர அனுபவமாகத்தான் இருக்கிறது. உலகெங்கும் பலஆயிரம் பேர் இறந்து வருகிறார்கள். சில நாடுகளில் பாதிப்பு குறைந்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சில மாநிலங்களில் குறைந்து காணப்பட்டாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டில்லி, கர்நாடகா, ஆந்திரா என்று பாதிப்புகள் இன்னும் கவலை அளிக்கும் அளவு தொடர்வதாகவே இருக்கிறது.

குறிப்பாக, தமிழகத்தில் சென்னை ஒரு கொரோனா நோய்த்தொற்று மையமாகமாறி அச்சுறுத்தி வந்தநிலை தற்போது மாறிவிட்டது. ஆனால் பலமாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்கின்றன.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இந்தநிலையில் கோவையில் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரிப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.ஏனென்றால் பல ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் உள்ள தொழில், வணிகத்தலமான கோவை நகரம், பொருளாதாரரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாசிட்டிவ் அதிகரிப்பு இன்னும் பாதிப்புகளைக் கூட்டுவதாக அமைந்து விடக்கூடாது.

ஒருபுறம் அரசாங்கமும், அமைச்சரும், அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் என்னதான் பம்பரமாக பணியாற்றினாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பெரிய அளவில் பயன் கிடைக்காது. இந்த கொரோனா வைரஸைப் பொறுத்தவரை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாதபடி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. கோவை போன்ற வளர்ச்சி பெற்ற நகரமாக இருந்தாலும்கூட மருத்துவமனை என்பதோ, இங்குள்ள மருத்துவ வசதிகள் என்பதோடு ஓரளவுதான் இருக்கமுடியும். அதைமீறி பாசிட்டிவ் எண்ணிக்கை உயர்ந்து நோயாளிகள் வருவார்களேயானால் பெரிய சிக்கல்கள் உருவாகும். அது பல வகையிலும் நமது நகரத்தையும், மாவட்டத்தையும் பின்னடைவுக்கு உள்ளாக்கும்.

இந்தநிலையில் தனிமனிதர்களாகவும், குடும்பங்களாகவும் ஒத்துழைப்பது மிகவும் அவசியம். இது நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை என்பதை உணர வேண்டும். அதில், முதல்படி இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் வராத அளவு நமது வீட்டையும், நமது நடவடிக்கைகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கமும், மருத்துவர்களும் என்னென்ன வழி முறைகளை கூறுகிறார்களோ அதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டியது நமது கடமை. இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் நாம் பாதுகாப்பாக நடந்து கொள்வது நமக்கும், சுற்றியிருப்பவர்களுக்கும் பாதுகாப்பானது.அதுவே அலட்சியம் என்றால் அது நம்மையும், உடன் இருப்பவர்களையும் சிக்கலுக்குள்ளாக்கிவிடும்.

இரண்டாவதாக குழந்தைகள், முதியோர்கள் விஷயத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைத்து அவர்களுக்கு உதவ வேண்டும். அடுத்து, உணவு விஷயத்தில் அக்கறை காட்டினாலே பாதி சரியாகிவிடுகிறது என்றும் தெரியவருவதால் அதனைக் கடைபிடித்து இந்த பாதிப்பைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

மருத்துவர்களையும், அரசுப் பணியாளர்களையும் பொறுத்த வரை அவர்கள் என்னதான் உற்சாகமாக பணியாற்றினாலும் அவர்களும் மனிதர்களே.கண்டிப்பாக இத்தனை மாதங்களில் இந்த பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடிய களைப்பு இருக்கத்தான் செய்யும். இந்தநிலையில் அவர்களின் பணிச்சுமையை அதிகரிப்பது போல நாம் நடந்துகொள்ளக் கூடாது. முடிந்த வரை சத்தான உணவு, லேசான பாதிப்புகளுக்குத் தகுந்த ஆலோசனையுடன் கூடிய நடவடிக்கை, அலட்சியத்தை முற்றுலும் தவிர்த்தல் என்று நமக்கு நாமே திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர் ஒருவர் சொன்னது நம் அனைவருக்கும் நன்கு பொருந்தும்.

இந்த ஆண்டின் மிக முக்கியமான திட்டமாக, லாபமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், நாம் உயிரோடு இருப்பதுதான் என்றார். நாம் உயிரோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.பாரதியார் சொன்னது போல இந்த விஷயத்தில், நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு வந்து விடும். அது வரக்கூடாது. வரவிடக்கூடாது. அதற்கு அடிப்படையாக அமைவது விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகள். மீண்டும் அந்த பொற்காலத்தை மீட்டெடுப்போம். ஏனுங்க சரி தானுங்களே?