அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 செவிலியர்கள் உட்பட 395 பேருக்கு கொரோனா உறுதி..!

கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக நேற்று (21.8.2020) ஒரே நாளில் 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 40 வயது, 35 வயது, 33 வயது செவிலியர்களுக்கும், 27 வயது ஆண் மருத்துவ பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த டயாலிசிஸ் டெக்னீசியன் 23 வயது வாலிபருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்புகள் இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுதவிர, பி.ஆர்.எஸ். போலீஸ்குடியிருப்பில் 25 வயது பெண் போலீஸ், போத்தனூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 56 வயது காவலர், 14 வயது பெண், 20 வயது பெண் மற்றும் 30 வயது பேரீசாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, செல்வபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர், நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த 17 பேர், கணபதியை சேர்ந்த 13 பேர், மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேர், சரவணம்பட்டியை சேர்ந்த 4 பேர், குனியமுத்தூரை சேர்ந்த 7 பேர்,  ரத்தினபுரியை சேர்ந்த 7 பேர், பீளமேட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 395 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,957-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், 7,760 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, 3,066 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தவிர, கொரோனாவுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 55 வயது ஆண், 41 வயது ஆண் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 80 வயது முதியவர் உள்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231-ஆக உயர்ந்துள்ளது.