வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வறண்ட நிலங்களுக்கான மாதிரி பழத்தோட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வறண்ட நிலங்களுக்கான மாதிரி பழத்தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் குமார் முன்னிலையில் இன்று (14.08.2020) மரக்கன்று நட்டு துவக்கி வைத்தனர்.

இதில் அத்தி, நெல்லி, நாவல், இலந்தை, சப்பொட்டா, லசோடா, சிரொன்ஜி போன்ற 17 வகையான மரங்கள் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மாணவர்களும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவு செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள மேற்கு இந்திய செர்ரி, நெல்லி போன்ற மர வகைகளும் நடப்பட்டன. இப்பழவகை மரங்கள் உயிர்சத்துகள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் கொண்டது மட்டுமல்லாமல் வறண்ட மற்றும் மண்வளம் குன்றிய நிலப்பகுதிகளுக்கு பயிரிட மிகவும் ஏற்றதாகும். மேலும் இப்பழ மரங்கள் குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பழமரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
பழத்தோட்டத்தை துவக்கி வைத்த பின் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி 112 வருடங்கள் பழமையான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவிரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் தாவரவியல் பூங்காவில் தாவர காப்பகத்தில் நடைபெறும் அடிப்படை வசதிகள் மற்றும் தாவர இன வகை பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

இந்த காப்பகத்தில், அரிதான, தனித்தன்மை வாய்ந்த அதிக மதிப்பிமிக்க  அலங்கார மற்றும் மருந்து தாவரங்கள் பாதுகாக்கப்பட்டுவருகிறது. தாவர காப்பகத்தில் இலை அலங்கார தாவரங்கள், பூக்கும் தாவரங்கள், பனை வகைகள், பொன் வகைகள், மூங்கில் வகைகள் கற்றாழை மற்றும் சதைப்பற்று  தாவரங்கள், மருந்து மட்டும் மணமூட்டும் பயிர்கள் உள்ளிட்ட 500 செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் வருகையையொட்டி தாவிரவியல் பூங்காவில் மரம் நடுதல் ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய மரமான அசோக மரத்தை நட்டார்கள். இன வகைகளை விரைவாக மதிப்பிடுதல் பற்றி ஒரு செயல் முறை விளக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாணவர்கள், தாவரவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தாவர இன வகைகளை எளிதில் இனம் கண்டறிய முடியும். 
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், பதிவாளர் கிருட்டிணமூர்த்தி, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் புகழேந்தி, வேளாண்மைப் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பேராசிரியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்துகொண்டனர்.