நள்ளிரவில் அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி..!

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கிருஷ்ணா நகர் சொக்க முத்து விதியை சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணவேணிக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாக கூறி டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத்துக்கு மேலாக நள்ளிரவில் காக்க வைத்துள்ளனர். இதற்கிடையே அவர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் ரித்திஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீஸ் அவரை அணுகிய பின்னர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்த்துள்ளனர். இது போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் அலைகழிக்கப்படுவதாலே தேவையற்ற அசம்பாவிதம் ஏற்படுகிறது.

இந்த கடுமையான கொரோனா காலத்திலும் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவரும் புனிதமான மருத்துவத்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில்சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.