அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி

கோவை மாவட்டத்தில் சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மட்டும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் உத்தரவின் படி, கோவை மாவட்டத்தில் ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டு தலங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியுடன் ஆகஸ்ட் 10ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதித்துள்ளது.

எனவே மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1459 திருக்கோவில்களில் 10,000 ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள 731 திருக்கோயில்களில் மட்டும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் இங்கு அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டி நடை முறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.