வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுடன்,வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு.

கோயம்புத்தூர் மாவட்ட முகாம் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக  அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகரா காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மருத்துவர் காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பேசுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தாலும் பொதுமக்கள் எவ்வித இன்னல்களும் நேரக்கூடாது என்ற நோக்கில், இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யாத பல்வேறு தரப்பினரின் துயர் துடைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதிலும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக்குடிநீர் வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வீடுதேடி வழங்குதல் என மக்களின் நலன் சார்ந்த தனித்துவம் மிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் கவனம் செலுத்தப்பட்டு வரும் அதேவேளையில், கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளிலும் கவனம் செலுத்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.