கொங்குநாடு கல்லூரியில் மீன் வளர்ப்புத் தொழில் முனைவோருக்கான இணையவழி வகுப்பு

 

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறையும் அலங்கார மீன்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக பட்டயப்படிப்பும் இணைந்து “அலங்கார மீன்கள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம்” எனும் பொருண்மையில் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டிற்கான இணையவழி பாட வகுப்புகள் ஆகஸ்ட் 3 முதல் 9 வரை ஏழு நாட்கள் நடைபெற்றன.

இந்த கொரோனா நோய் தடுப்பு காலம் உலகின் அனைத்துத் தொழில்துறைகளையும் நலிவடையச் செய்த்துள்ளதோடு அனைவரையும் வீட்டுலேயே முடக்கி போட்டுள்ளது. இதனால் பலரும் வேலைவாய்ப்பினை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் சிறு வயதினர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஈடுபட்டு தொடர்ந்து பொருளீட்டும் சூழலை உருவாக்குவதே இக்கல்வியின் தலையாய நோக்கமாக உள்ளது.

இந்த இணையவழி கல்வி வகுப்பினை ஆகஸ்ட் 3ம் தேதி கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தொடங்கி வைத்து தலைமையுரை வழங்கினார். செட்டிநாடு ஆராய்ச்சி கல்விநிறுவனங்களின் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுப்ரமணியன் தொடக்கவுரை  வழங்கி பேசுகையில், அலங்கார மீன்கள் வளர்ப்பு என்பது இந்தக் காலகட்டத்தில் சிறந்த சுயத் தொழிலாக அமையும் என்றார்.

மத்திய அரசின் வர்த்தம் மற்றும் தொழில்துறையின் மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ராஜிவ் காந்தி மீன் வளர்ப்பு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கந்தன், அலங்கார மீன்வளர்ப்புத் துறையின் தொழில் நுணுக்கங்களையும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள லாபம் சார்ந்த வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார்.

இத்துறையின் வல்லுனர்களாக திகழும் மத்திய அரசாங்கத்தின் இந்திய வேளாண்மை கழகத்தின் முதன்மை விஞ்ஞானிகளான ஏ.ஆர்.திருநாவுக்கரசு, டிடி அஜித் குமார் மற்றும் ஜிதேந்திர குமார் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பயனுள்ள செய்திகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்கினர்.

மத்திய அரசாங்கத்தின் விலங்கியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜே.எஸ்.யோகேஷ் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் சந்தானம், மினி சேகரன், மகேஷ் குமார், பிரகாஷ், யுவராஜ், சுவகத் போஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உரை நிகழ்த்தினர்.

சிங்கப்பூரில் உள்ள அலங்கார மீன் உற்பத்தி நிலையத்தின் நிறுவனர் பழனி செல்வம் பங்கேற்று உரை வழங்கினார். இந்த இணைய வழிக் கல்வியில் துபாய், ஈராக் நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 310 பேராசிரியர்கள், 242 ஆராய்ச்சி மாணவர்கள், 1090 மாணவர்கள் உட்பட மொத்தம்  1665 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சான்றிதழுக்கான தகுதிதேர்வில் 816 பேர் பங்கேற்றனர்.

கல்லூரி முதல்வர் லட்சுமணசாமி வரவேற்புரை வழங்கிட இணைய வழிக் கல்வியின் ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறையின் உதவி பேராசிரியருமான ராஜா நன்றி உரை வழங்கிட இணையவழிக் கல்வி ஆகஸ்ட் 9 அன்று  நிறைவடைந்தது.