தேசிய விளையாட்டு வீரர் குழுவிற்கு ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் தேர்வு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் பி.காம் இறுதியாண்டு மாணவர் சதீஷ்குமார் இந்திய அரசு இளம் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கியுள்ள “டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் ” என்ற திட்டத்தில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் குழுவில் தேர்வாகியுள்ளார். கடந்த வாரம் வெளியான தேர்வுப்பட்டியலில் முதல் 250 வீரர்களுள் ஒருவராகவும், தமிழகத்திலிருந்து பங்கேற்கும் இரண்டு பேட்மிட்டன் வீரர்களில் ஒருவராகவும் இவர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள விளையாட்டு வீரர்கள் உலகளவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஆணையத்தால் சிறந்த முறையில் பயிற்சி பெறும் வாய்ப்பினைப் பெறுவதோடு இந்திய அரசின் ஊக்கத்தொகையினையும் பெறுகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் விளையாட்டுப் போட்டிகளில் செய்த சாதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் ஆசிய விளையாட்டுகளில் விளையாடியுள்ளார். ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பேட்மிட்டனில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழக விளையாட்டு வீரரான இவர், கொரியாவில் நடைபெற்ற சர்வேதேச போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற அகில இந்திய ஜூனியர் தரவரிசை பேட்மிட்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள இவர் “2024ல்  பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கிலும், 2028ல்  லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்று நாட்டிற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பதே என் இலக்கு” என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

விளையாட்டில் சர்வதேச சாதனை படைக்கவிருக்கும் மாணவர் சதீஷ்குமாருக்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், விளையாட்டுத்துறை இயக்குனர் வடிவேலு ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் வழங்கியுள்ளனர்.