தூய்மை பணியாளர்களுக்கு சுதந்திர தினத்தில் கௌரவம்

-கோவை மாவட்ட ஆட்சியர்

கோவையில் இந்த ஆண்டு சுதந்திர தினம் எளிமையான முறையில் கொண்டாடப்பட உள்ளதாகவும், கொரோனா காலத்தில் மக்கள் சேவை செய்தவர்கள் சுதந்திர தினத்தன்று கௌரவிக்கப்படவுள்ளனர் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வழக்கமாக வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை, கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சுதந்திர தினத்தன்று நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினம் எளிமையாக கொண்டாட பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது : கொரோனா நோய் தொற்று காரணமாக கோவையில் சுதந்திர தினம் எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கம்போல் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் இம்முறை நடைபெறாது. இந்த நிகழ்ச்சியில் அதிகபட்சமாக அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.
மேலும் 50க்கு உள்ளாக அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
இந்த கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை செய்த சுகாதாரப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் 50 பேர் இந்த விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மற்றவர்களை வீடுகளுக்கே சென்று கௌரவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கூடுவதைப்போல் இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.