இஎஸ்ஐ மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களை கெளரவித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

கோவை இ எஸ் ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிபுரிந்து வரும் 200 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களையும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை பாராட்டி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் கெளரவித்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பொது மேலாளர் தாமோதரன், மருத்துவமனையின் டீன்  நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்பணியில் ஈடுபடும் 85 பெண்களுக்கு சேலையும், 85 ஆண்களுக்கு வேஸ்டி மற்றும் சர்ட்டுகள், ஆளொன்றுக்கு 10  கிலோ காய்கறிகள், சோப்புகள் என 2 லட்சம் மதிப்பில் வழங்கினர்.

இதுவரை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் முகக்கவசம், மருத்துவர் பாதுகாப்பு உடை, தானியங்கி சானிடைசர் இயந்திரம், சானிடைசர், ஆகியவைகளை கொரோனா முன்கள போராளிகளான  காவல் துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பொது மேலாளர் தாமோதரன் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து  இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் நிர்மலா பேசுகையில், 3500 நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும், தற்போது 350 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது என்பதை உணர்த்தும் வண்ணம் இன்றைக்கு  அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேலும் பொதுமக்கள் விழிப்போடு இருக்கவும் வலியுறுத்தினார்.