புதிய கல்விக் கொள்கை காகித புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ?

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை வரவேற்றும், எதிர்த்தும், தங்களது கருத்துக்களைச் தெரிவித்ததும் பல கருத்துக்கள் உலா வருகின்றன. குறிப்பாக கல்வியாளர்களைத் தாண்டி அரசியல்வாதிகளும் இதில் பல கருத்துகளை சொல்லி வருகிறார்கள். ஆனால் கல்வி என்பது வெறும் அரசியல் அல்லது நிர்வாகம் சார்ந்தது மட்டும் அல்ல, அது தகுதி வாய்ந்த ஒரு தலைமுறையை எதிர்காலத்தில் உருவாக்கும் ஒரு பயிற்சிக்கூடம் என்பதை உணர்ந்து இதுபோன்ற கருத்துகளை அணுக வேண்டும்.

கல்விக்கான நிதியை 4.6 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. அதைப்போலவே இப்போதுள்ள பல முறைகள் மாற்றப்படும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 10 + 2 என்பது மாற்றப்பட்டு 5 + 3 + 3 + 4 ஆண்டுகள் என்ற முறை அறிமுகப்படுத்தும் நிலை உள்ளது. அடுத்து பட்டப்படிப்புகள் நான்கு ஆண்டுகள், அதில் ஓராண்டு முடித்தால் சான்றிதழ், இரண்டு ஆண்டுகள் முடித்தால் பட்டயம் என்ற முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. எந்த ஒரு புதிய திட்டமும் அறிமுகப்படுத்தும் முன்பு கருத்து சொல்லலாம். ஆனால் அதை அமல்படுத்தும்போதுதான் அதன் தாக்கம் தெரியும்.

பொதுவாக, இந்தக் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் எதிர்ப்பவர்கள், சில குறிப்பிட்ட காரணங்களை சொல்கிறார்கள். அதில் முக்கியமானது மும்மொழிக் கொள்கை. மற்ற அம்சங்கள் என்னவென்றே தெரியாத அளவுக்கு இந்த மும்மொழிக் கொள்கை பற்றிய கருத்துகள் மட்டும் விவாதங்களில் இடம்பெறத் தொடங்கி இருக்கின்றன. இந்த விவாதங்கள் பல ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. அதை மறுபடியும் எடுத்து களத்தில் இறக்குவது இப்போது தேவையா என்று இரண்டு தரப்பினரும் யோசிக்க வேண்டும். ஏன் தொடர்ந்து இங்கு மும்மொழி கற்பதை எதிர்க்கிறார்கள், அதற்கான பின்புலம், மற்ற காரணங்கள் என்ன என்று மத்திய அரசை ஆள்பவர்களும், அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கை என்பது வெறும் மும்மொழிக் கொள்கை மட்டுமே அல்ல என்பதையும் எதிர்ப்பாளர்களும் உணர வேண்டும்.

இன்றைய கல்வித்திட்டங்கள் தற்போது எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கி வருகின்றன என்பதையும் நாம் அனைவரும் யோசிக்க வேண்டும். குறிப்பாக, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த அறிவுத்திறன், சமூக அக்கறை, தனித்திறன்கள், எதனையும் எதிர்கொள்ளும் திறன் போன்றவை தற்போது இருக்கின்றதா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை. அதிலும், ஒரு காலத்தில் பாராட்டப்பட்ட பொறியியல் கல்வியானது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய கதையாக இருக்கிறது. தெருவுக்கு பத்து பொறியியல் பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதை கிராமம், நகரம் என்ற வேறுபாடுகள் இன்றி காண முடிகிறது. இன்னொரு புறம், பொறியியல் கல்லூரிகளின் விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. அதேபோல தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கான பின்புலத்தில் உள்ள காரணங்கள் என்ன என்று இது தொடர்புடையவர்கள் அனைவரும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் பட்டம் பெற்ற பலருக்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ சரியாக பிழையின்றி எழுதுவது என்பதே சிரமமாக இருக்கிறது. ஆங்கில மோகம் கொண்டு ஆங்கில மீடியம் படித்த பல மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச இயலாத ஊமைகளாக நிற்பதையும் காண முடிகிறது. இந்நிலையில், வேறு ஏதாவது தனித்திறன்களை இந்தக்கல்வி முறை அனைவருக்கும் வழங்கி இருக்கிறது என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள பொருளாதாரக் கணக்குகள், இழப்புகள் மிகவும் சிக்கலானவை. இன்னும்கூட இந்திய பெற்றோர் பலருக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம்தான் தங்கள் எதிர்காலம்; அவர்கள் சம்பாதிப்பதெல்லாம் அந்தக் குழந்தைகளின் நலனுக்காகத்தான் என்ற நிலையுள்ளது. குறிப்பாக, கல்வி கற்கத்தான் செலவு செய்கிறார்கள். கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறார்கள்.

இந்நிலையில் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியையும், மதிப்பு மிகுந்த பணத்தையும் இழப்பதுதான் கல்வி என்றால் அந்தக் கல்வியின் மூலமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் எவ்வித பயனும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. வெறும் பட்டம் பெற்ற காகிதப் புலிகளை உருவாக்காமல் திறன் மிகுந்த மாணவர்களை, தனக்கும், சமூகத்துக்கும் பயன்தரக்கூடிய கல்வி கற்றவர்களை உருவாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

உலக அளவில் வளர்ந்த நாடுகளுடன் நாம் போட்டியிட வேண்டும் என்றால் அது கல்வித்திட்டத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

வெறும் பள்ளி, கல்லூரி சென்று பொழுதையும், பணத்தையும் செலவு செய்தவர்களை வைத்துக் கொண்டு எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு மாணவர்கள் மட்டுமே காரணமோ, பொறுப்போ அல்ல. இதுபோன்ற கல்விக்கொள்கையை உருவாக்குபவர்கள் தொடங்கி, அரசாங்கம், கல்வியாளர்கள், ஆசிரிய சமூகம், கல்விக்கூடங்களை நடத்தும் அதிகாரிகள் மற்றும் முதலாளிகள், எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் அரசியல்வாதிகள், போரசையோ, சின்ன ஆசையோ கொண்ட பெற்றோர்கள் என்று எல்லோருக்கும் இதில் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

கிட்டத்தட்ட கொரோனா வைரஸ்போலத்தான் இதுவும். சமூகத்தில் நல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லது; கெடுதல் நடந்தால் அதுவும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பாதிப்பு தரும். நல்லது, கெட்டது இதில் எதை நோக்கி நாம் பயணம் செய்யப் போகிறோம் என்பதை இந்த புதியக் கல்விக்கொள்கை போன்றவைத் தீர்மானிக்கப்போகின்றன. அந்த வகையில் இதில் அர்த்தமுள்ள விவாதங்களை கையில் எடுத்து, பேசி அதன் மூலம் நல்ல தீர்வுகளை நோக்கி நகர்வது நமது இன்றைய கடமை.

இன்று நம் முன் உள்ள கேள்வி : வெற்றிவானில் பறந்திட உதவும் சிறகுகளா அல்லது முதுகை அழுத்தும் சிலுவைகளா, எது வேண்டும் என்பதுதான். இரண்டில் எதைத் தேர்வு செய்யப்போகிறோம்?