இந்த விதிமுறைகளுடன் ஜிம்முக்கு செல்லவேண்டும்

கொரோனா தாக்கத்தால் கடந்த சில மாதங்களாகவே ஜிம்கள் திறக்கப்படாத நிலையில் வரும் 10ம் தேதி முதல் ஜிம்கள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சில விதிமுறைகளுடன் ஜிம்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜிம்முக்கு செல்லும் மக்கள் அரசே திறக்கச் சொல்லிவிட்டது என்ற அலட்சியத்துடனும், பயமில்லாமலும் இருந்துவிடக்கூடாது. சில விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவது அவசியம். அவை என்னென்ன என்பதை நாம் இப்போது பார்ப்போம்

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வரவேண்டும் :  ஒவ்வொரு பேட்சுகளாக பிரித்து பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டும் சென்று வரவும். முன் கூட்டியே சென்று நெரிசலை உண்டாக்குவதை தவிர்க்கவும்.

பொருட்களை நீங்களே கொண்டு செல்லுங்கள் : தண்ணீர் பாட்டில் பயன்படுத்துங்கள். அங்கேயே உடை மாற்றிக்கொள்வதை தவிர்க்கவும். ஜிம் பயிற்சிக் கருவிகளைத் தாண்டி மற்ற எதையும் தொடாதீர்கள். தேவைப்படும் அனைத்தையும் வீட்டிலிருந்தே கொண்டு செல்லுங்கள்.

சானிடைசஸர் அவசியம் : உடற்பயிற்சிக் கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பும் , பின்பும் சானிடைஸர் தடவுவது அவசியம். அதை எந்த நேரமும் மறந்துவிடாதீர்கள்.

ஜிம் கிளவுஸ், ஸ்வெட் பேண்ட் அணியுங்கள் : பாக்டீரியா தொற்றிலிருந்து தப்பிக்க ஜிம் பேண்ட் அணிந்துகொள்வது அவசியம். இதனால் முகத்தில் கை வைப்பதையும் தவிர்க்கலாம். கைகளில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புகளும் குறைவு. அதேபோல் உங்கள் உடல் வியர்வை கீழே சொட்ட விடாமல் ஜிம் பேண்டுகள் உறிஞ்சுமாறு அவற்றை அணிந்துகொள்வது நல்லது.

உடல் நிலை சரியில்லை எனில் செல்ல வேண்டாம் : இருமல், சளி இப்படி ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலும் ஜிம் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வு எடுப்பது நல்லது.

சமூக இடைவெளி : ஜிம்மிலும் 6 அடி சமூக இடைவெளியை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள்.

மாஸ்க்கை தவிர்க்கலாம் : பொதுவாகவே மாஸ்க் அணிவதால் மூச்சு விடுவது சற்று சிரமமாக இருக்கும். இந்நிலையில் ஜிம் பயிற்சியின் போது மூச்சு வாங்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும். இந்நேரத்தில் மாஸ்க் அணிந்து பயிற்சி செய்தால் சிரமமின்றி உங்களாக மூச்சு விட முடியாது. எனவே இவற்றையும் கருத்தில் கொண்டு செயலாற்றுவது அவசியம். கடினமாக இல்லாத இலகுவான மாஸ்க் அணியலாம்