200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான ‘முலன்’ படத்தை ஓடிடியில் வெளியிடும் டிஸ்னி

கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன. இந்தச் சூழலில் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகள் திறக்கப்படுவதும் தள்ளிக்கொண்டே போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ‘டெனெட்’, ‘கான்ஜூரிங் 3’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21-ம் தேதி அன்று வெளியாகவிருந்த ‘முலன்’ திரைப்படத்தைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டிஸ்னி நிறுவனம்.

இந்நிலையில், திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்று தெரியாத நிலையில் ‘முலன்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘முலன்’ படத்தைப் பார்க்க விரும்புவர்கள் அந்தப் படத்துக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி டிஸ்னி + ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கான கட்டணம் 30 டாலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிஸ்னி நிர்வாகி பாப் சபெக் கூறுகையில், ”இந்த கணிக்கமுடியாத சூழலில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்தப் படத்தைச் சரியான தருணத்தில் வெளியிடுவது முக்கியம் என்று நாங்கள் கருதினோம். திரையரங்குகளுக்குச் செல்லமுடியாத பார்வையாளர்களுக்கு இந்த அற்புதமான படத்தை வெளியிட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்” என்றார்.

டிஸ்னி + இல்லாத நாடுகளில் மட்டும் இப்படத்தைத் திரையரங்கில் வெளியிட டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SOURCE – Hindu Tamil