விதை சேமிப்பிற்கு ஈரப்பதம் மிக அவசியம்

விதை சேமிக்கப்படும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் ஈரப்பதம் இருக்குமேயானால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு விதையின் முளைப்புதிறன் மற்றும் தரம் பாதிக்கப்படும். அந்த விதை விதைப்பதற்கு ஏற்புடையதாக இருக்காது, விதையின் ஈரப்பதம் மிகக் குறைவாக இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

இதுகுறித்து கோவை விதை பரிசோதனை நிலைய விதை பரிசோதனை அலுவலர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எந்த ஒரு விதையையும் விதைக்கும் முன்னர் தேவையான தர நிர்ணயங்களை கொண்டு உள்ளனவா என பரிசோதனை செய்ய வேண்டும். முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் போன்ற தர நிர்ணயங்கள் சரியான அளவில் உள்ள தரமான விதைகளை விதைக்கும்போது அதிக விளைச்சலைப் பெறமுடியும்.

தரமான விதை என்பது சான்று பெற்ற விதையாகும். விதை சான்று பெறுவதற்கு விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், பிற ரகக் கலப்பு போன்றவற்றுடன் விதையின் ஈரப்பதமும் மிக முக்கியம். ஒவ்வொரு பயிர் விதைக்கும் தேவையான ஈரப்பதம் அளவு மாறுபடும். விதையின் அதிக பட்ச ஈரப்பதம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். உதாரணமாக, நெல்லுக்கு 13 சதவீதம், பருப்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற தானிய விதைகளுக்கு 12 சதவீதம், பருத்திக்கு 10 சதவீதம் அதிகபட்ச ஈரப்பத அளவாக இருக்க வேண்டும்.

விதைகளை சேமிக்கும்போது சுத்தமான அறையில் சேமிக்க வேண்டும். விதையை சேமிக்க சணல்பை அல்லது புது துணிப்பை போன்றவற்றில் சேமிக்க வேண்டும். விதைப் பைகளை தரையில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு மரப்பலகையில் அடுக்க வேண்டும்.  விதைகளை பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விதை  நேர்த்தி செய்தும் சேமித்து வைக்கலாம்.

விதை விற்பனையாளர்கள்,  உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளின் தரம், சேமித்து வைக்கப்போகும் விதைகளின் தரம் குறித்து அறிந்து கொள்ளவும் மற்றும் விதைச்சான்று பெறுவதற்காகவும் விதையின் ஈரப்பதத்தினை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

விதைக்குவியலில் இருந்து 100 கிராம் விதை மாதிரி எடுத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் அடைத்து  பயிர், ரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இத்துடன் முளைப்புத்திறன் அறிய தேவையான அளவு விதை மாதிரியையும், மற்றொரு பையில் எடுத்து அத்துடன் முகவரி கடிதம், மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த நகல் போன்றவற்றுடன்  ஒரு விதை  மாதிரிக்கு ரூ.30 கட்டணத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விதை பரிசோதனை  அலுவலர், விதை பரிசோதனை நிலையம், 1424ஏ, தடாகம் ரோடு, கோவை. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், விபரங்களுக்கு ,  0422-2981530 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.