ஆமா, இது இப்ப ரொம்ப முக்கியம்!

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நிலைமையின் தீவிரம் கருதி, முக்கியத்துவம் கருதி பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றன. இந்த வாரம் அப்படி ஒரு தலைபோகிற பிரச்னை ஊடகசெய்திகளில் அடிபட்டது. தமிழகத்தின் புகழை, இந்தியாவின் புகழை தனது இசையமைக்கும் திறனால் உலக அரங்கில் உயர்த்திய இசையமைப்பாளர் ஒருவர் தனக்கு எதிராக ஒரு குழு வேலை செய்து தன்னை இந்தித் திரையுலகில், அதாவது பாலிவுட்டில் பணி செய்யவிடாமல் தடுக்க முயற்சிப்பதாக ஒரு கருத்துக் கூறி அது மக்களிடம் வைரலாகிபரவியது. இதைக்கேட்டு தாங்க முடியாமல், தமிழகத்தின் பலபகுதிகளில் மேகங்களே கண்ணீர் சிந்தியதாக சொல்லும் அளவுக்கு அதுகுறித்து செய்திப்பரவல், விவாதங்கள் எல்லாம் நடந்தன.

இதில் ஒன்று மட்டும் புரியவில்லை. தினந்தோறும் உலகெங்கும் பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மக்களுக்குப் பிடித்தமான நிகழ்வுகள் அல்லது மக்களை பாதிக்கின்ற செய்திகள்தான் செய்தியாக மாறிவலம் வருகின்றன. நம்ம இசையமைப்பாளருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் அவரைப் பொறுத்தவரை நியாயமே என்றாலும் அதற்காக மக்கள் என்ன செய்ய வேண்டும், எதற்கு இவ்வளவு கவலைப்பட வேண்டும் என்று தெரியவில்லை.
அங்கிங்கெனாதபடி எங்கு சென்றாலும் குழுமனப் பான்மை, வேண்டியவர், வேண்டாதவர் பாகுபாடு உள்ளிட்ட பல தடைகள் இருக்கின்றன.அதுவும் கோடிக் கணக்கில் பணமும், வானளாவிய புகழும் கிடைக்கும் திரைத்துறை எனும் போது இதுபோன்ற தடங்கல்களும் அதிகமாகவே நிகழக்கூடும். மற்றபடி இது வழக்கமான ஒன்றுதான். ஒரு தெருவோரத்தில் கடை நடத்துபவரிடம் இருந்து அனைவருக்கும் போட்டியாளர்கள், அவர்களின் செயல்பாடுகள் என்று இருப்பது சகஜம். ஆனால் இது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற வேண்டும்? நாட்டில் இது என்ன அவ்வளவு தலைபோகிற பிரச்னையா என்றுதான் புரியவில்லை.

நாடெங்கும் கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தினந்தோறும் அதுகுறித்த நிகழ்வுகளால் நாடே பாதிக்கப்பட்டு திகைத்து நிற்கிறது. சாதாரண மக்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் அதிர்ந்து போய் உள்ளனர். பல மாநிலங்களில் இருந்து பணிக்காக இடம் பெயர்ந்தவர்கள் இந்த லாக் டவுன் காலத்தில் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி தங்கள் குடும்பத்துடன் இணைவதற்கு பட்டபாடுகள் பலநூறு படம் எடுத்தாலும் தீராது. அவ்வளவு துயரம்!

தான் பெற்ற குழந்தை மரணத்தின் வாயிலில் இருக்கும் போது அந்த செய்தியைக்கேட்டு ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து துடித்த தந்தை, கடைசியில் அந்தக் குழந்தை இறந்ததையும் கேட்டு வேறு ஏதோ தெருவில் நின்று கொண்டு கதறியது கல்நெஞ்சையும் கரைக்கும். அப்பா, நான் கொரோனாவால் இறக்கப் போகிறேன், என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வயதான தந்தைக்கு சொல்லிவிட்டு மரணமடைந்தார் இளைஞர் ஒருவர். மருத்துவமனை, மருத்துவமனையாய் கதவைத்தட்டியும் எந்த கதவும் திறக்காமல் நடுத்தெருவில் எமனின் வாய்க்கு பலியான ஒருவர்.எந்த நோயும் கிடையாது; எனக்கு எப்படி இந்த கொரோனா வைரஸ் வந்து பற்றியது என்றே தெரியவில்லையே என்ற கதறித்துடித்து இறந்த ஒருவர். இப்படி பல உண்மைச் சம்பவங்கள் பல மாநிலங்களில் பல ஊர்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
லாக்டவுன் 1, லாக்டவுன் 2 என்று அது பாட்டுக்கு ஊரடங்கு ஒருபுறம் போய்க்கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து மத்திய, மாநில அரசாங்கங்களின் போராட்டம் ஒரு புறம் நடக்கிறது; மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் இவர்களுக்கு உதவும் உதவியாளர்கள் என ஒரு பெரிய பட்டாளமே தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து இந்த கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் துணிந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா தாக்குதல் ஒருபுறம் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் வெளியே சொல்ல முடியாத வேதனையாக, உள்ளிருந்து கொல்லும் புற்றுநோய் போல பொருளாதாரச் சிக்கல் பல குடும்பங்களையும், நிறுவனங்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அன்றாடங் காய்ச்சிகள், வாரக் கூலிகள், கூலி வேலைக்கு செல்வோர், தெருவோர வணிகம் செய்வோர், கட்டடத் தொழிலாளர்கள் என்று பல கோடி மக்களோடு சுற்றுலா போன்ற துறைகளைச் சார்ந்தவர்களும் கடுமையாக என்றால் அவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் சில உதவிகளும், கிடைக்கின்ற ரேஷன் அரிசியும், நல்ல மனம் படைத்த சிலரின் உதவியும் பலரின் உயிர்களைக் ‘காப்பாற்றி வைத்திருக்கின்றன’ என்றே சொல்ல வேண்டும். இப்படி பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் அல்ல; நேற்று வரை உழைத்துக் கொண்டிருந்தவர்கள், இன்றும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலை வாய்ப்பும், வாழ்க்கை ஆதாரங்களும் இழந்து செய்வதறியாது நிற்கிறார்கள்.

இப்படியெல்லாம் நாடு முழுவதும் பல்வேறு சிக்கல்களில் பலர் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் போது சிலரின் தனிநபர் சார்ந்த சிக்கல்கள் பெரிது படுத்தப்பட்டு முக்கியத்துவம் பெறுவது அநியாயத்திலும் அநியாயம்.

சிறுதொழில்கள் ஆதரவின்றி முடங்கிக்கிடப்பதால் பல கோடி தொழிலாளர்கள் வேலையின்றித் தவிப்பது ஒருபுறம்; பலமாதம் பாடுபட்டு விளைவித்த விவசாய விளைபொருட்களை வெளியே கொண்டுபோய் விற்க முடியாமல், விற்றாலும் வாங்குவதற்கு பெரிய அளவில் ஆள் இல்லாத நிலையில் முடங்கிக்கிடக்கும் விவசாயிகள் ஒருபுறம்; அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, புதிய கல்விக்கொள்கை, கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு என்று நாட்டில் ஆயிரம் முக்கிய பிரச்னைகள் இருக்கும் போது தேவையற்ற இது போன்ற சின்ன சின்ன செய்திகளை ஏதோ நாட்டுக்கே ஆபத்து வந்தது போல பலூன் ஊதுவது போல ஊதுவது அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாகாது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க சொல்லிற் பயனிலாச்சொல் என்பது வள்ளுவர் வாக்கு. இதனைப் புரிந்து கொண்டு தேவையற்ற சில்லறை பிரச்னைகளை கொள்ளுவதும், தள்ளுவதும் நம்கையில்தான் இருக்கிறது.