3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக நடிகர் சோனு சூட் அறிவிப்பு

தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துவருபவர் சோனு சூட். இவர் தமிழில் சந்திரமுகி, அருந்ததி, தேவி போன்ற படங்களில் நடித்தவர். தற்போது கொரோனா காலத்தில் ஊரடங்கினால் ஆதரவற்றோர் பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருகிறார் சோனு சூட்.

ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளட்ட பல உதவிகளை செய்து வந்தார். அண்மையில் ஆந்திர மாநிலத்தில் ஒருவர் தன் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார், வாழ்வதாரத்திற்காக ரோட்டில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார் இதுபோன்ற சேவைகளால் சோனு சூட் மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில் சோனு சூட் பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலை இழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கி தர உள்ளதாக சோனு சூட் அறிவித்துள்ளார். இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள சோனு சூட் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கென்று பிரத்யேக வலைதள பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்.