சமூக இடைவெளியுடன் பக்ரீத்  கொண்டாட்டம்

இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக கோவையிலும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பக்ரீத் பண்டிகை பாதுகாப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தெரிவதை முன்னிட்டு  தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.