11ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றதற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு 

இன்று வெளிவந்த பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதல் இடம் பெற்றுள்ளதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களில், 357 பள்ளிகளைச் சார்ந்த 15,415 மாணவர்கள், 18,832 மாணவியர்கள் என மொத்தம் 34,247 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 15,011 மாணவர்கள், 18,586 மாணவியர்கள் என மொத்தம் 33,597 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

13 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 1 ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி, 1 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 11 அரசு உதவி பெறும் பள்ளிகள், 171 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 197 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், இந்த ஆண்டு 98.10 சதவிகிதம் தேர்ச்சி பெற்று  மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தற்போது கடந்த ஆண்டை விட அனைத்து  வகை பள்ளிகளிலும்  தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற சிறப்பாக தேர்வெழுதிய மாணாக்கர்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.