கோவை ஞானி மார்க்சிஸவாதி மட்டுமல்ல, நல்ல கணவரும்கூட!

-எழுத்தாளர் அகிலா

கிட்டத்தட்ட ஐயாவுடன் எனக்கு 15 ஆண்டு கால பழக்கம். வாரம் ஒருமுறையாவது இவரைப் பார்த்து வருவேன். பார்வையற்று இருந்தாலும், இவரது அலமாரியில் உள்ள எந்த புத்தகத்தைக் கேட்டாலும் அது எந்த அடுக்கில் உள்ளது என்பதைக் கூறுவார்.

இவரது திறனாய்வுக் கட்டுரைகளில் மார்க்சிஸ கருத்துக்கள் அதிகம். கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்கக் களத்தில், அதனை வெல்வதுதான் பெண்ணியம் என்பார். இவரது துணைவியாரின் மறைவிற்குப் பின் எழுதிய “இந்திரா, என் நினைவுகள்” என்ற நூலில் இவரின் காதல் ஆச்சரியப்பட வைக்கிறது. மார்க்சிஸவாதியாக, வானம்பாடி கவிஞராக, விமர்சகராக நமக்குத் தெரிந்த இவர், ஒரு நல்ல கணவராகவும் இந்த புத்தகம் மூலம் வெளிப்படுகிறார்.
இவரிடமிருந்து திறனாய்வைக் கற்றுக்கொண்டதை விட இவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும். வானம்பாடி கவிதைகளில் இவரது படைப்பு வித்தியாசமானது. ‘கவிதை என்பதை உடனே பதிவிடக்கூடாது, அதனை மனதில் ஊறப்போட்டு, சொல்ல வந்த கருத்து முழுவதுமாக அதில் வெளிப்படுகிறதா என்பதை அறிந்து அதனை செம்மைப்படுத்த வேண்டும்’என்பார்.

ஒரு தகப்பனாக என்னை வழிநடத்தினார். எல்லோரையும் சமமாகபார்த்து, அன்போடு நடத்துவார். இவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இனி இவருடன் முகம் பார்த்து உரையாட முடியாது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.