வெறுப்பு வேண்டாமே!

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. ஆனால் பல நேரங்களில் அன்பைப் பரப்புவது மாறி வெறுப்பை உருவாக்கும் செயல்கள் சமூகத்தில் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான், கந்தர் சஷ்டி கவசம் தொடர்பான யூ டியூப் சர்ச்சை. அந்த யூடியூப்காரர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், என்ன நோக்கத்துக்காக செய்திருந்தாலும் அந்த செயல் தேவையற்ற சர்ச்சையோடு பல ஆயிரம் மக்களிடம் வெறுப்பை கிளப்பிவிட்டதைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

கடவுள் இருக்கிறார், இல்லை என்பதைத்தாண்டி ஏதோ சமூகத்தில் பகுத்தறிவு புகட்டுவதுபோல புத்திசாலித்தனமாக நடந்து கொண்டவர்களின் நோக்கமும் நிறைவேறவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கிறது என்பதற்காக ஒருவர் பேசுவது, எழுதுவது எல்லாமே சரியென்று ஆகிவிடாது. அதிலும் பல கோடி மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயத்தை படார் என்று உடைப்பதால் ஏதோ சாதிக்கப்போகிறேன் என்றால் ஒரு பலனும் எக்காலத்திலும் ஏற்படப்போவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் ஒன்றும்தெரியாத அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அவர்களுக்கு இறைநம்பிக்கை உண்டு, என்றாலும் அதன் பின்னணியில் உள்ள நல்லது, கெட்டதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்பத்தான் நடக்கிறார்கள். கடவுள் உருவங்களுக்கு நான்கு கை, எட்டு கை என்று இருந்தால் அதற்கான விளக்கமும், அதை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற பக்குவமும் பக்தர்களுக்கு காலம்காலமாக இருந்து வருகிறது. மக்கள் எந்தக் கூட்டத்தையும் தங்களிடம் வந்து இதை நம்புங்கள், இதை கடைபிடியுங்கள் என்று கேட்கவும் இல்லை; யூ டியூப்பில் போடவும் இல்லை.

அடுத்து, கந்தர் சஷ்டி கவசம் என்பது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் பாராயணம் செய்யக்கூடிய ஒரு நூல். மேலும் பக்தர்கள் விரும்பிக் கேட்கக்கூடிய இசை அமைதி கொண்ட ஒரு நூல். அடிப்படையில் ஒரு பக்தி சார்ந்த இலக்கியம். இலக்கியம் என்பது அதற்கான அம்சங்களைக் கொண்டது. அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி மக்கள் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். இதிலே தனியே ஒரு கூட்டத்துக்கு என்ன சிக்கல் வந்தது என்றுதான் புரியவில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆயிரமாயிரம் பிரச்னைகளில் மக்கள் அலைமோதிக்கொண்டு இருக்கும்போது சமூகத்துக்கு செய்வதற்கும் சொல்வதற்கும் இந்தக் கூட்டத்திடம் வேறு செய்திகள் எதுவும் இல்லையா? சரி, அப்படியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக பல ஆயிரம் பேரின் மனதைப் புண்படுத்துவதால் என்ன கிடைக்கப் போகிறது? இவர்கள் என்ன சீர்திருத்தம் செய்வதற்கான ‘ஹோல்சேல் ஏஜென்சி’ நடத்துகின்றவர்களா? இவர்கள் சார்ந்துள்ள, அல்லது செய்கின்ற எல்லாமே பகுத்தறிவானது என்று சொல்ல முடியுமா?

மதத்தை நம்புகிறவர்களோ, நம்பாதவர்களோ இங்கு பிரச்னை இல்லை. அவர்கள் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கிறதா இல்லையா என்பதுதான் பிரச்னை. இவ்வாறு ஒரு தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்துவதால் என்ன இலாபம்? அப்படி கிடைத்தாலும் மக்களிடம் வெறுப்புணர்வைப் பரப்பிக் கிடைக்கும் அந்த இலாபம் அர்த்தமில்லாத ஒன்று.

ஊருக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. மக்கள் அதைத் தீர்க்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து இந்த அறிவாளிகள் செயல்படலாம். ஆனால் அதற்கெல்லாம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அக்கறையும், அறிவும், திறனும் வேண்டும். இந்த மாதிரி பரபரப்பு டியூப் நடத்துவதற்கு அதெல்லாம் தேவையில்லை. ஏதாவது ஒன்றை போஸ்ட் செய்து குட்டையைக் குழப்பிக்கொண்டு இருக்கலாம்.

மக்களுக்கு எதிராக செயல்படும் எத்தனையோ ஆன்மீகவாதிகளை மக்கள் நன்கு அறிவார்கள். சிலர் ஏமாந்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மக்கள் போலிகளைக் கண்டுகொள்வதும் இல்லை மதிப்பதும் இல்லை. அவர்கள் மதிப்பதெல்லாம் மக்களுக்கு நன்மை செய்யும், வாழ்விற்கு வழிகாட்டும் நல்லாசிரியர்களைத்தான். அதுவும் நமது நாட்டிலேயே ஏராளமான ஆன்மீகவாதிகள் அப்படி இருக்கிறார்கள். ஒரு விவேகானந்தர் ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மிஷன் எவ்வளவு நற்பணிகளை, சமூகப் பணிகளைச் செய்து வருகிறது என்று தெரிந்துகொண்டால் நல்லது.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று சொன்ன வள்ளலார் பற்ற வைத்த நெருப்பில் இன்னமும் வடலூரில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க சோறு வெந்து கொண்டிருக்கிறது. நோயாளிகளுக்கும், அநாதைகளுக்கும் சேவை செய்வதைத் தனது கடமையாகக் கொண்ட அன்னை தெரசாவும் ஒரு ஆன்மீகவாதிதான். இப்படி நல்லவர்களை இனம் பிரித்துத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் மக்களுக்கு உண்டு.

இப்படி திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பி காலம், காலமாக இருந்துவரும் நம்பிக்கையின் மீது சேற்றைவாரி, கிண்டல் செய்வதன் மூலம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இதுபோன்ற கூட்டங்கள் வழிகாட்டும் அளவுக்கு மக்கள் ஏமாந்து கெட்டுப்போகவும் இல்லை. அதற்கான நேரமும் இதுவல்ல.

காலத்துக்கேற்ற மாதிரி மாறுதல்கள் தேவைதான். சில துறைகளில் உடனடியாக சட்டத்தின் மூலம் மாற்றங்களைக்கொண்டு வரலாம். ஆனால் அதனை மக்கள் மனங்களில் கொண்டுவர பல நாட்களாகும். அதுவரை இந்த மலிவான பகுத்தறிவு புகட்டல்களை விட்டுவிட்டு மக்களுக்கு பயன்படும்படியான உண்மையான பணிகளில் எல்லோரும் ஈடுபடுவது சமூகத்திற்கு நல்லது.

மறுபடியும் அய்யன் திருவள்ளுவர் காட்டிய நல்வழிதான் நினைவுக்கு வருகிறது. அன்பின் வழியது உயிர்நிலை. அதை விட்டுவிட்டு வெறுப்பை விதைத்தால் வெறுப்பே விளையும். அன்பெனும் கனியிருக்க வெறுப்பென்னும் காய் எதற்கு?