மாவட்டங்களில் தீவிரமாகப் பரவும் தொற்று: ஊரடங்கு நீட்டிப்பு? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னையில் தொற்றுப் பரவல் குறைந்த நிலையில், மாவட்டங்களில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி நிறைவு பெறுவதால் அடுத்து என்ன நடவடிக்கை, ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தவுடன் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தொடர்ந்து 6 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சென்னை, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் சில மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு வகிக்கின்றனர். சென்னையைத் தவிர மாவட்டந்தோறும் கொரோனா தொற்று நடவடிக்கைகள் அனைத்துக்கும் மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு வகிக்கின்றனர். மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள்.

இதனால் முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு ஊரடங்கு முடியும் தருவாயில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் 15-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13,348, திருவள்ளூர் 12,806, மதுரை 10,392, காஞ்சிபுரம் 8,017, விருதுநகர் 6,884, தூத்துக்குடி 6278, திருவண்ணாமலை 5,644, வேலூர் 5,385, திருநெல்வேலி 4,350, தேனி 4,337, திருச்சி 3,755, ராணிப்பேட்டை 4,306, கன்னியாகுமரி 4,073, கோவை 4,052, கள்ளக்குறிச்சி 3,498, சேலம் 3,309 , விழுப்புரம் 3,361, ராமநாதபுரம் 3132, ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்களாக உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது.

இதனால் மாவட்ட அளவில் சோதனைகளை அதிகரிப்பது, தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது உள்ளிட்டவை கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்தும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக மேற்கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும்.

 

 

SOURCE :Hindu Tamil