மாசுபாட்டைக் குறைத்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் உயரும்

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி மாசுபாட்டைக் குறைத்தால் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் அதிகரிக்கும் என சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் (ஈபிஐசி) தயாரித்த காற்றின் தர ஆயுள் குறியீட்டின் (ஈக்யூஐ) புதிய பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.

இந்த அறிக்கையில், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்ட நான்கு நாடுகளான வங்காள தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மிகவும் மாசுபட்டுள்ளன, வட இந்தியா தெற்காசியாவின் மிகவும் மாசுபட்ட பகுதியாக வளர்ந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில், தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை இந்த நாடுகளில் எரிசக்தி தேவையை உயர்த்துவதற்கு வழிவகுத்து உள்ளன. இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சேர்த்து, சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

வங்காள தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து எடுக்கும் மின்சாரம் 1998 முதல் 2017 வரை மூன்று மடங்காக அதிகரித்தது. பயிர் எரித்தல், செங்கல் சூளைகள் மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளும் இப்பகுதியில் மாசுபாட்டை அதிகரிப்பதற்கு பங்களித்தன என்று அறிக்கை கூறியுள்ளது.

மேலும் இந்தியாவின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத காற்று மாசுபாட்டுக்கு ஆளாகின்றனர். வட இந்தியாவில் வசிக்கும் 24.8 கோடி மக்கள் இதே மாசு அளவு தொடர்ந்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை இழக்க நேரிடும்.

லக்னோவில் மாசு 11 மடங்கு அதிகம். லக்னோவில் வசிப்பவர்கள் இதே மாசுபாடு தொடர்ந்தால் 10.3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழக்க நேரிடும்.

டெல்லியில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் 9.4 ஆண்டுகள் அதிகம் வாழலாம். மாசுபாடு இந்தியாவின் தேசிய தரத்தை பூர்த்தி செய்தால் 6.5 ஆண்டுகள் அதிகம்  வாழலாம்.

பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகமாக 7 ஆண்டுகளும்,அரியானா மாநில மக்கள் 8 ஆண்டுகளும் அதிகமாக வாழலாம்.

இந்தியாவின் 140 கோடி  மக்கள் உலக சுகாதார அமைப்பின் சராசரி காற்று மாசுபாடு வழிகாட்டுதலை மீறிய பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தியாவின் சொந்த சாராசரி காற்றின் தரத்தை மீறிய பகுதிகளில் 84 சதவீதம் பேர் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.