கோவையில் இன்று கொரோனாவால் மூவர் உயிரிழப்பு

கோவை: சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் ஜூலை 26 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

திருமலைநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மூச்சுத்திணறலுடன் கடந்த ஜூலை 26 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மூதாட்டி உயிரிழந்தார்.

கோவில்மேடு நீலி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த 81 வயது முதியவர் 26 ஆம் தேதி காய்ச்சல் பாதிப்புக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் முதியவர் 26 ஆம் தேதி இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் பரிசோதனை முடிவு இன்று (28.7.2020) பெறப்பட்டதில் முதியவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்துள்ள உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 296 பேர் குணமடைந்து இன்று (28.7.2020) பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களில் 2 ஆயிரத்து 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.