குடிமராமத்து திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்து செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழக முதல்வர் விவசாயத்தினையும், விவசாயிகளின் நலன் காக்க அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார். விவசாயிகளின் மிகுந்த வரவேற்பினை பெற்ற குடிமராமத்து திட்டமே இதற்கு சான்றாக விளங்கும். இத்திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில் நீர் வரத்து வாய்க்கால், கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வாய்க்கால்கள், கால்வாய்களில் கொள்ளளவுக்கு அதிகமாகப் படிந்துள்ள மண்ணை அகற்றுதல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டிற்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மூலம் தமிழ்நாட்டில் ரூ.499.79கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள  ஆணையிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்புத்திட்டமான குடிமராத்து திட்டம் ரூ.7.19 கோடி மதிப்பீட்டில் 43 குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. பரம்பிக்குளம் கோட்டத்தில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் 21 பணிகளும், ஆழியார் வடிநில கோட்டத்தில் ரூ.2.80கோடி மதிப்பீட்டில் 22 பணிகளும் நடைபெற்று வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தை சேர்ந்த ஆழியார் வடிநில கோட்டத்தின் கீழ் 3 கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலசங்கங்களுக்கு ரூ.55.00 லட்சங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் 90 சதவீதமும் பாசானதாரர்கள் சங்கத்தின் சார்பில் 10 சதவீதமும் நிதி பங்களிப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தினை குறித்து பயனாளி கூறுகையில் “நான் கஞ்சம்பட்டி கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் கே.எஸ்.பாலச்சந்திரன். குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள கஞ்சம்பட்டி கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் எல்லைக்குட்பட்ட கால்வாய்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பாசனத்தின் போது நீர் விரயமின்றி கஞ்சம்பட்டி பகிர்மானக் கால்வாய், உபபகிரிமானக் கால்வாய்களில் தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்பட்டு கடைமடை வரை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடைந்துள்ளது.

கால்வாயினை செடி, கொடி அகற்றி தூர்வாருவது மிக சிரமமாக இருந்த நிலையில் குடிமாரமத்து திட்டத்தின் கீழ் செடி கொடிகள் அகற்றி தூர்வாரி பாசன செய்யப்பட்டதால் நன்றாக விவசாயம் செய்ய முடிகிறது.குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவசாயிகளுக்கு நேரடி பயனுள்ளதாகவும்,  விவசாய உற்பத்திற்கு பேருதவியாகவும் இருந்தது. எனவே கஞ்சம்பட்டி கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சார்பாக இத்திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்து செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு, கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.