ஆஸ்கர் நாயகனுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு

பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிறகு ஏராளமான குற்றச்சாட்டுகள் பாலிவுட் சினிமாவிற்கு வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனக்கும் பாலிவுட் படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை பத்திரிக்கையில் குறிப்பிட்டுளார்.

அதனை தொடர்ந்து தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன்”. என பதிவிட்டுள்ளார்.

இவரை போன்றே மலையாள பிரபலம் ரசூல் பூங்குட்டியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.