மாநகராட்சி தூய்மை பணியில் 5 ஆயிரம் பணியாளர்கள்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் தினமும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணியும், தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் என 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.