இணைய நேரலையில் சுதந்திர தின விழா

இந்தியாவில் கொரோனா தொற்று மாதக்கணக்கில் இருந்து பெருகிக்கொண்டே இருக்கிறது. இதன் எண்ணிக்கைகளை பார்த்தே பலருக்கு காய்ச்சல் வந்துள்ளது என்றால் அது ஆச்சரியத்திற்குரியதாக இருக்காது. தற்பொழுது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தின விழா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து செய்துவருகிறது.

மேலும், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

டில்லி செங்கோட்டையில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வில் ராணுவம் மற்றும் டில்லி காவல்துறையின் அணிவகுப்பு நடைபெறும். 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதமர் உரையாற்றுவார். அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும்.

காலை 8 மணிக்கு மாநில அல்லது யூனியன் பிரதேச தலை நகரங்களில் முதல்வர் கொடி ஏற்றல், காவல்துறையினர், ஊரக காவலர்கள், என்சிசி, ஸ்கவுட், உள்ளிட்டோருக்கு விருது வழங்கல்,, முதல்வர் உரை, தேசிய கீதம் இசைத்தல்.

கொரோனா பரவலால் மாநிலங்கள், மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துகள் என விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரை விழாவுக்கு அழைத்து கவுரவிக்கலாம். அதேபோன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலரையும் அழைக்கலாம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.