நீச்சல், உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா கால ஓய்வு நேரத்தை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தன் பண்ணை வீட்டில் தீவிர நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒரு சில பணிகளைத்தவிர மற்றவை அனைத்தும் முடங்கியுள்ளன. அதில், குறிப்பாக திரைப்படப் படப்பிடிப்புப் பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் இந்தியாவின் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் அனைவரும் முழு ஓய்வு எடுத்து வருகின்றனர். மேலும், சில முக்கிய நட்சத்திரங்கள், இயக்குநர்கள் சமையல், உடற்பயிற்சி, கதை ஆக்கம், எழுத்து என வீட்டில் இருந்தபடியே இயங்கி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் இயல்பாகவே காலை, மாலை தவறாமல் தியானம், யோகா செய்து வருபவர். இந்தக் கொரோனா கால ஓய்வு நேரத்தை தியானம், யோகா பயிற்சியோடு நீச்சல் மற்றும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி மேற்கொள்கிறார். சென்னை நகரில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் கடந்த சில வாரங்களாக அவர் அங்கேயே தங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.