நீரா பானம், கள், பதநீர் இறக்கும் பானைகளை போலீசார் உடைப்பதாக விவசாயிகள் புகார் !

நீரா பானம், கள், பதநீர் இறக்கும் பானைகளை சூலூர் போலீசார் அடித்து உடைப்பதாக விவசாயிகள் மாவட்ட காவல் கண்காப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, “நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் சார்பாக கடந்த 2009 ஜனவரி 21 முதல் தமிழக அரசை, கள்ளுக்கு தென்னை பனை மரங்களில் இருந்து அனுமதி கேட்டு, கோரிக்கை வைத்து போராட்டம் செய்து வருகிறோம். கடந்த 2009ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது சிவசுப்பிரமணியம் கமிஷன் பரிந்துரையின்பேரில் ஆய்வு செய்து இன்று வரை அந்த அறிக்கையை வெளியிடவில்லை. மேலும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கு விதித்து உள்ள தடையை நீக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். அதன்படி இன்று (24.7.2020) வரை கள்ளு இறக்கி கொண்டு வருகிறோம்.

மேலும் தற்போது தமிழக முதல்வர் நீரா பானத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். நீரா என்பதும், கள் என்பதும் ஒரே தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படுவது. இந்த நிலையில்,  கள்ளுக்கு தடை செய்வதை விவசாயிகளால் செயல்படுத்த முடியாது. கடந்த இரண்டு வார காலமாக சூலூர் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் தோட்டங்களில் நீரா, பதநீர் மற்றும் கள் ஆகியவற்றை இறக்குவதை காவல்துறையினர் தடுத்து பானைகளை உடைப்பதும், பானைகளை எடுத்து செல்வதுமாக உள்ளனர். இந்த பிரச்சினையில் தலையிட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.