கோவையில் மூன்றாவது முழு ஊரடங்கு

மூன்றாவது முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவையின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் எந்த நிபந்தனைகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்ட ஒரு சில சேவைகள் தவிர மற்ற கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எந்த விதமான கடைகளும் இயங்கக் கூடாது என்றும், நிபந்தனையற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (19.7.2020) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் அனைத்து முக்கிய இடங்களும் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன. கோவையில் உள்ள 54 இடங்களில் போலீசார் தற்காலிகமாக சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் தேவையில்லாமல் வெளியே சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.