தமிழக சிறுபான்மையினர் கடனுதவி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல்

tகோவை மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டிற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன், கறவைமாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டாம்கோ மூலம் செயல்படுத்தும் கடன் உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எந்ததொழில் செய்ய கடன் பெற்றார்களோ அந்த தொழிலை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்கள் அளித்து கடன் பெற்றது தெரிய வந்தால் கடன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு தொகை மொத்தமாக வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், புத்தர், சீக்கியர், பார்சீகர்கள், ஜெயின் பிரிவைச் சார்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் சுய உதவிக்குழு கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2-ன் கீழ் சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.50,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள்,  அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையிலும், திட்டம் 2-ன் கீழ் ரூ30,00,000 வரையிலும் 3% வட்டி விகிதத்திலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, கோவையில் வசிக்கும் சிறுபன்மையினர்கள் (கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கியர், புத்தர், பார்சி மற்றும் ஜெயின்) கடன் பெற tamco.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் கடன் பெற, சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, புகைப்படம், ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/சலான்(Original) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அனைத்து சிறுபான்மையின பொதுமக்களும் கடன் உதவிகள் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.