சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது என தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துள்ளது. தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள், மழைநீர் வடிகால் திட்டப் பணிகள், 197 பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெ.யு.சந்திரகலா, உட்பட அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.