புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர்

கோவையில் டிஐஜியாக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய டிஐஜியாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கோவை சரக டிஐஜியாக இருந்த கார்த்திகேயன் கடந்த வாரம் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, சென்னையில் பணியாற்றி வந்த நரேந்திரன் நாயர் கோவை சரக காவல்துறையின் துணை தலைவராக (டி.ஐ.ஜி) நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் இன்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டு கோப்புகளில் கையொப்பமிட்டார்.

மேலும், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்த அவர், கோவை சரகத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நலன் மீது சிறப்பு அக்கறை செலுத்தப்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேபோல, தவறிழைக்கும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.