‘சந்திரயான்’ ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்ததினம்

தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை 1958 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982 ஆம் ஆண்டு சேர்ந்தார். இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு சந்திரயான் திட்ட இயக்குநரானார். அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் அஸ்ட் ரோசாட், ஆதித்யா-L1 செயற்கைக்கோள்களை வழிநடத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.