அரசியல் கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் தொண்டர்களை ஒன்று திரட்டி சந்திப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிக்கையில் கூறியிருப்பது, அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்களையும், பொதுமக்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

இதனால் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இச்சூழல் கோவையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு சூழலில் ஊரடங்கு முழுமையாக அகற்றப்படாத நிலையில் அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள், இயக்கப் பிரதிநிதிகள், தொண்டர்களை சந்திப்பது, பொதுமக்களை திரட்டி ஓரிடத்தில் கூட்டுவது தவிர்க்க வேண்டும்.

இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிக்கையில் கூறியுள்ளார்.