எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பு

நிலக்கடலை

நிலக்கடலை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்து மற்றும் ஏற்றுமதி பயிராகும். இந்தியாவில் நிலக்கடலை வெவ்வேறு பருவங்களில் பயிரிடப்பட்டாலும் மொத்த உற்பத்தியில் 80 சதவீத உற்பத்தி கரிஃப் பருவத்தில் கிடைக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் முதல் முன் கூட்டிய மதிப்பீடுகளின் படி, 2019-2020 ஆம் ஆண்டு கரிஃப் பருவத்தில் 63.11 இலட்சம் டன்கள் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2019 – 2020 ஆம் ஆண்டு ரூ. 5096.39 கோடி மதிப்பிலான 6.64 இலட்சம் டன் நிலக்கடலையை இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. குஜராத், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை நிலக்கடலை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். நடப்பு கரிஃப் பருத்தில் குஜராத்தில் 6.5 லட்சம் எக்டர் மற்றும் ராஜஸ்தானில் 6.7 லட்சம் எக்டர் பரப்பளவில் நிலக்கடலை விதைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இவ்விரு மாநிலங்களிலும் நிலக்கடலை பரப்பளவு அதிகரித்துள்ளது. கோவிட்-19 பாதிப்பின் காரணமாக ஏற்றுமதி குறைந்து உள்நாட்டு சந்தைகளில் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் முன் கூட்டிய மதிப்பீட்டின் படி, 2018-19 ம் ஆண்டு கரிஃப் பருவத்தில் 4.29 லட்சம் டன்கள் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் கடலூர் ஆகியவை நிலக்கடலை பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களில் பெரும்பாலும் ஜீலை முதல் ஆகஸ்ட் வரை (ஆடி பட்டம்) மற்றும் ஜனவரி முதல் பிப்ரவரி வரை (தைபட்டம்) நிலக்கடலை விதைக்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக திணடிவனம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வுகளின் சந்தை மற்றும் விலை அடிப்படையில், அறுவடையின் போது தரமான நிலக்கடலை சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 60 முதல் ரூ. 62 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்றுமதி இல்லையெனில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப் படுகின்றனர்.

எள்

உலகளவில், இந்தியா மிகப்பெரிய எள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராக திகழ்கிறது. மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை எள் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். இம்மாநிலங்கள் நாட்டின் மொத்த எள் உற்பத்தியில் 88 சதவீதம் பங்களிக்கின்றன. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2019-20 ஆம் ஆண்டு கரிஃப் பருவத்தில் இந்தியாவில் எள் உற்பத்தி 6.68 லட்சம் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் குறைவாகும். குஜராத்தில் அதிக பரப்பளவு மற்றும் உற்பத்தி திறன் காரணமாக எள் உற்பத்தி 2018 – 19 ஆம் ஆண்டு 11,650 டன்களிலிலிருந்து 2019 – 20 ஆம் ஆண்டில் 24,490 டன்களாக அதிகரித்துள்ளது. இந்தியா 2019 – 20 ஆம் ஆண்டில் ரூ.3067 கோடி மதிப்பிலான 2.32 லட்சம் டன்கள் எள்ளை ஏற்றுமதி செய்துள்ளதாக அறியப்படுகிறது. அமெரிக்க, தென் கொரியா, வியட்நாம், ரஸ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா எள் ஏற்றுமதி செய்கிறது.

தமிழ்நாட்டில் விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவுர், கரூர், சேலம் மற்றும் கடலூர் ஆகியவை எள் பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும். கோவிட்-19 காரணமாக, ஏற்றுமதி குறைந்து மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து எள் வரத்து தென் மாநிலங்களுக்கு வருகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 17 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள சிவகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், நல்ல தரமான எள்ளின் விலை அறுவடையின் போது (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.85 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.