கண்ணாடி போல் காட்சியளிக்கும் குற்றால அருவி

கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட கோவை குற்றாலத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாததால் அருவி நீர் கண்ணாடி போல் களங்கமில்லாமல் காட்சியளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி நொய்யலில் கலக்கும் கோவை குற்றாலம் அருவி கோவையின் முக்கிய சுற்றுலா தளத்தில் ஒன்று. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

பொதுவாக கோடை விடுமுறை நாட்களில் கோவை குற்றாலம் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோவை குற்றலாம் மூடப்பட்டது. தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் தடை நீடித்து வருகிறது.

கோடை விடுமுறைகளில் மூடி இருந்த குற்றாலம் அருவி, மழைக்காலம் தொடங்கி உள்ள போது மூடப்பட்டுள்ளது. தற்பொழுது நீர் வரத்து அதிகரித்து பொதுமக்கள் வரவு இல்லாததால் கோவை குற்றாலம் அருவி நீர் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது. மேலும் வன விலங்குகள் அதிகளவு தண்ணீர் குடிக்க வரத் துவங்கி உள்ளது. மேலும் சட்ட விரோதமாக மக்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க தினமும் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.