தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசுகையில், கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பு பணிகளும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் ஒட்டும் பணிகளையும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு மருத்துமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் பணிகளை தினசரி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் கட்டாயமாக்குதல் தனிமனித இடைவெளியினை கடைபிடித்தல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறிதல், மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தினந்தோறும் மருத்துவ முகாம்கள் மூலம் தொற்று உள்ள நபர்கள் கண்டறிதல், நோய்த் தொற்று உள்ள நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து கட்டாய பரிசோதனை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு அபராதம் விதித்திடவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலுள்ள கடைகளில் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் செயல்படும் கடைகளை களத்தில் சென்று ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்திட சிறப்பு கண்காணிப்பு படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.