எம்.ஜி.ஆர்.காய்கனி மொத்த வியாபார மார்க்கெட்டில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.காய்கனி மொத்த வியாபார மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெங்காயம், தக்காளி ஆகிய மொத்த வியாபார கடைகளை மார்க்கெட்டிற்கு எதிரேயுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டும், மீதமுள்ள காய்கனி மொத்த வியாபாரம் பழைய எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிலேயே செயல்பட்டு வந்தது. இங்குள்ள கடைகளில் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாமலும், வியாபாரிகள் முகக்கவசம் அணியாமலும், மார்க்கெட் பாதைகளிலும், மழைநீர் வடிகால் அமைப்புகளின் மீதும் ஆக்கிரமிப்பு செய்து காய்கனி மூட்டைகளை வியாபாரம் செய்து கூட்ட நெரிசலை உண்டாக்கி கொரோனா தொற்று பரவ காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே இந்த மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு முதல் கட்ட கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு நேற்று (26.06.2020) முதல் எம்.ஜி.ஆர் மார்க்கெட் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில்அரசன், செயற்பொறியாளர் சரவணக்குமார், சுகாதார அலுவலர் ஆர்.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.