கொரோனா பரவலைத் தடுக்க நடிகர் அஜித் கொடுத்த ஐடியா !

கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட மருத்துவர் கார்த்திகேயன் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கொடுத்தவர் நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.

அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களைத்தான் அஜித் அறிவுரையின் பேரில் உருவாக்கியுள்ளனர். இதனைக் கொண்டு அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவில் கிருமி நாசினிகளைத் தெளித்து விடலாம். இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்று வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் இதனைக் கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை #AjithLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ‘தக்‌ஷா’ என்னும் மாணவர்களின் ஆராய்ச்சிக் குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தக் குழு பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப் படைத்தது. பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் பரிசுகள் வென்றது குறிப்பிடத்தக்கது.