உலகிலேயே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் !

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும். ஏனெனில் பாம்பு கொத்தினால், அதன் விஷத்தன்மை உடலில் ஏறி நமது உயிர் போய்விடும் என்பதுதான். ஆனால் உலகில் உள்ள அனைத்து பாம்புகளுக்குமே கடித்ததும் உயிர் போகும் அளவு அதிக விஷத்தன்மை உள்ளது என்று சொல்லமுடியாது.

ஒருவேளை விஷத்தன்மை இருந்தாலும், அது கொத்தினால் விரைவில் உயிர் போய்விடாது. உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு அற்புதமான ஒரு உயிரினம்தான் பாம்பு. இத்தகைய பாம்புவின் விஷத்தைக் கொண்டு பல நாடுகளில் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிறைய ஆராய்ச்சியாளர்களும் இன்றும் பாம்புவின் விஷத்தைக் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஆராய்ச்சி செய்யப் பயன்படுத்தும் விஷங்கள் அனைத்தும், மிகுந்த விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.

சரி, உங்களுக்கு உலகிலேயே அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் எவையென்று தெரியுமா?

ரேட்டில் ஸ்நேக் (Rattlesnake)


ரேட்டில் ஸ்நேக் என்னும் பாம்பின் விஷமானது திசுக்களை அழித்து, உறுப்புக்களை செயலிழக்கச் செய்யக்கூடியத் தன்மை கொண்டது. இது கிழக்கத்திய நாடுகளில் உள்ள பாம்புகளிலேயே மிகவும் கொடிய பாம்பு இனமாகக் கருதப்படுகிறது.

டெத் ஆடர் (Death Adder)


இந்த வகையான பாம்பு ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா பகுதிகளில் காணப்படுகிறது. இந்த ஆடர் பாம்புகள் பார்ப்பதற்கு விரியன் பாம்புகள் போன்றுதான் காணப்படும். ஆனால் இந்த டெத் ஆடர் பாம்பு கடித்த ஆறு மணி நேரத்திற்குள் முறையான சிகிச்சையைப் பெறாவிட்டால், பக்கவாதம் அல்லது மரணத்தை உண்டாக்கிவிடும். இது உலகின் அதிவேக ஸ்ட்ரைக்கராக உள்ளது.

விரியன் பாம்பு (Viper)


விரியன் பாம்பு உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படும். ஆனால் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த விரியன் பாம்பு என்றால் அது சா ஸ்கேல்ட் வைப்பர் மற்றும் செயின் வைப்பர் தான். இவை மிகவும் வேகமாக ஊர்ந்து செல்லக்கூடியவை. இந்த பாம்பு கடித்த 1-14 நாட்களுக்குள், மாரடைப்பு அல்லது சுவாச செயலிழப்பை ஏற்படுத்தி, மரணத்தை உண்டாக்கிவிடும்.

பிலிப்பைன் நாகப்பாம்பு (Phillipine Cobra)


நாகப்பாம்பு இனங்களிலேயே, இந்த பிலிப்பைன் நாகப்பாம்புதான் மிகவும் ஆபத்தானது. இந்த பாம்பு கடித்த 30 நிமிடங்களிலேயே நரம்பு நஞ்சடைந்து, சுவாச மண்டலம் செயலிழந்து, இறப்பு ஏற்படக்கூடும்.

டைகர் பாம்பு (Tiger Snake)


இது பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் காணப்படும். இந்த பாம்பு கடித்தால், 1/2 மணிநேரத்திலேயே உயிர் போய்விடும்.

கருப்பு மம்பா (Black Mamba)


இந்த கருப்பு மம்பா ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும். இது மிகவும் கோபக்கார மற்றும் உலகிலேயே வேகமாக ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பு. இதன் விஷத்தன்மையும் மிகவும் அதிகம்.

தய்பான் (Taipan)


இந்த பாம்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது. இதன் விஷத்தன்மையானது இரத்த உறைவை ஏற்படுத்தி, துடிதுடித்து சாக வைக்கும்.

ஃபியர்ஸ் பாம்பு அல்லது உள்நாட்டு தய்பான் (Fierce Snake Or Inland Taipan)


இது உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளுள் ஒன்றாகும். இதன் தோற்றம் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும்.